இந்தியா

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி

DIN

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மக்களும், வியாபாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 2 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
லிட்டர் கணக்கே இல்லை: தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விலை உயரும்போதோ அல்லது குறையும்போதோ அதுகுறித்த தகவல் பொதுமக்களுக்கு பரவலாகத் தெரிவதில்லை. இதனால், வாகனங்களுக்கு குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு லிட்டர் கணக்கில் பெட்ரோல் நிரப்புவதற்குப் பதிலாக, 100, 200 என ரூபாய் கணக்குக்கு பட்ஜெட் அளவிலேயே பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பெட்ரோல், டீசல் விலைகளில் கடந்த சில மாதங்களால் பைசா கணக்கிலேயே விலை உயர்வு இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 10 நாள்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு அதிரடியாக ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 13 -ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.53-ம், டீசல் ரூ.64.70 ஆகவும் இருந்தது. செவ்வாய்க்கிழமை (ஜன. 23) நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.06 ஆகவும், டீசல் ரூ.66.64 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 
இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் வணிகர்கள் சங்க மாநில தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:
கடந்த ஏழு மாதங்களில் பழைய விலையுடன் ஒப்பிடும்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9ம் உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், மக்களின் மாத பட்ஜெட்டில் அதிக செலவு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசின் கலால் வரி சராசரியாக பெட்ரோலுக்கு ரூ.21-ம், டீசலுக்கு ரூ.18-ம் விதிக்கப்படுகிறது. வாட் வரியைப் பொருத்தவரை சராசரியாக டீசலுக்கு 25 சதவீதம், பெட்ரோலுக்கு 36 சதவீதம் என உள்ளது. எனவே, மத்திய அரசின் வரியான கலால் வரியை குறைக்க வேண்டும். 
இல்லையெனில், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையிக்கும் உரிமையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு மீண்டும் பெற்று, விலை நிர்ணயிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சரக்கு -சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி) கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT