ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி: பிரதமர் மோடி கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள், ஹிந்துக்களை குறிவைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட
புதுதில்லி: ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள், ஹிந்துக்களை குறிவைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த சீக்கிய பிரமுகர் அவ்தார் சிங் கால்சா என்பவரும் ஒருவர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
Advertisement
ஆப்கானிஸ்தானின் பன்முகத்தன்மை மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த சோகமான நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர் சிங் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான சக்திகளை" எதிர்த்துப் போராடுவதற்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.