முகப்பு
இந்தியா

குழந்தை கடத்தல் வதந்தியால் மகாராஷ்டிரத்தில் 5 பேர் அடித்துக் கொன்ற சம்பவம்: 23 பேர் கைது 

மகாராஷ்டிரத்தில் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து 5 பேரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 ஜூலை, 2018 at 10:29 AM
பகிர்:

மும்பை: மகாராஷ்டிரத்தில் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து 5 பேரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த  போலீஸார், 23 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்தில் அமைந்துள்ளது ரெயின்பாடா கிராமம். அந்த கிராமத்துக்கு மாநகரப் பேருந்து மூலமாக அடையாளம் தெரியாத சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றதாகத் தெரிகிறது. அப்போது அங்கிருந்த சிறுமி ஒருவரிடம் அந்த நபர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட கிராம மக்கள் அவர்களை குழந்தையை கடத்த வந்த கும்பல் என்று தவறாக எண்ணியுள்ளனர்.

அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் அவர்கள் இத்தகைய முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபர்களைச் சூழ்ந்து கொண்ட கிராம மக்கள், அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில், நிலைகுலைந்த 5 பேர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Advertisement

தகவலறிந்து வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவரும் குழந்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற வதந்தியை முதலில் பரப்பியது யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உண்மை விவரங்களை அறியாமல் 5 பேரை மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் மகாராஷ்டிரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.