முகப்பு
இந்தியா

தில்லி ஐஐடி உள்ளிட்ட 6 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி உள்ளிட்ட நாட்டில் உள்ள 6 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்பு அந்தஸ்து (இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்)

Updated On : 10 ஜூலை, 2018 at 1:12 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி உள்ளிட்ட நாட்டில் உள்ள 6 கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்பு அந்தஸ்து (இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) வழங்கி திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தில்லி ஐஐடி , மும்பை ஐஐடி, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகிய மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும், மணிபால் உயர்கல்வி அகாதெமி, பிட்ஸ் பிலானி உயர் கல்வி நிறுவனம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:
கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது நமது நாட்டுக்கு முக்கியமான ஒன்றாகும். நம் நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தும், உலக தரவரிசை பட்டியலில் முதல் 100, 200 இடங்களில் ஒன்று கூட இடம்பெறவில்லை.
இவ்வாறு கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலமாக உலக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களை முன்னேற்ற முயற்சிக்கப்படுகிறது. இந்த முடிவின் மூலமாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏறத்தாழ சுயாட்சி அந்தஸ்தை அடைந்துள்ளன. மேலும், மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்படாமல் இருப்பது, கல்வி உதவித் தொகை, வட்டி தள்ளுபடி, கல்விக் கட்டண தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலமாக உறுதி செய்யப்படும் என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.
இந்திய தரவரிசையில் முதல் 50 இடங்களிலும், சர்வதேச தரவரிசையில் 500 இடங்களிலும் இருக்கும் கல்வி நிறுவனங்கள் இந்த அந்தஸ்துக்காக விண்ணப்பிக்கலாம். போதிய அடிப்படை வசதிகளுடன், உலகத் தரத்திலான வசதிகளும் அந்தக் கல்வி நிறுவனங்களில் இருப்பது உறுதி செய்யப்படும்.
தற்போது அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ள 3 அரசு கல்வி நிறுவனங்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி வரையில் மானியமாகப் பெறும். எனினும், எஞ்சிய 3 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மானிய வாய்ப்பு இல்லை. இந்த சிறப்பு அந்தஸ்துக்காக 114 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அதில் 11 மத்திய பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள், 27 ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களும் அடங்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.