முகப்பு
இந்தியா

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் பாஜகவுடன் பிரச்னையா?: நிதீஷ் மறுப்பு

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையே பிரச்னை நிலவி வருவதாக வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை

Updated On : 10 ஜூலை, 2018 at 1:22 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையே பிரச்னை நிலவி வருவதாக வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம், பாட்னாவில் பொதுமக்களுடன் நிதீஷ் குமார் கலந்துரையாடும் வராந்திர நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் பங்கேற்றார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதீஷிடம், மக்களவைத் தேர்தலுக்காக பிகாரில் தொகுதி பங்கீடு மேற்கொள்வதில் பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே பிரச்னை நிலவி வருவதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
நான் இங்கு துணை முதல்வருடன் அமர்ந்திருக்கிறேன். இதன் மூலம் எந்த பிரச்னையும் இன்றி கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை நிலவுவதாக கூறுவதில் உண்மையில்லை. தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுப்பதில் நாங்கள் அவசரம் காட்டவில்லை. அதுதொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுத்து, மக்களுக்கு அறிவிப்போம் என்றார் அவர்.
மேலும், வரும் 12-ஆம் தேதி பிகார் மாநிலத்துக்கு வரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை தாம் சந்திக்க இருப்பதாகவும் நிதீஷ் கூறினார்.
பிகாரில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி': இதேபோல், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, பிகாரில் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நாகாலாந்து பேரவைத் தேர்தல், மே மாதத்தில் நடைபெற்ற கர்நாடகப் பேரவைத் தேர்தலில் தனித்துதான் போட்டியிட்டோம். இதனால், இரு கட்சிகளிடையே எந்த பிரச்னையோ குழப்பமோ எழவில்லை' என்று நிதீஷ் பதிலளித்தார்.
லாலு உடல் நிலை குறித்து 4 முறை விசாரித்தேன்'
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தின் உடல் நலம் குறித்து தொலைபேசி மூலம் 4 முறை விசாரித்ததாக நிதீஷ் குமார் கூறினார். மும்பையில் அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட லாலுவின் உடல் நிலை குறித்து மிகவும் தாமதமாக விசாரித்ததாக நிதீஷ் மீது லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அரசியல் வேறுபாடுகளை கடந்து, லாலுவின் உடல் நிலை குறித்து தொலைபேசி மூலம் நான் 4 முறை விசாரித்தேன்' என்று நிதீஷ் கூறியுள்ளார். 
மத்திய அமைச்சரின் செயலை ஏற்க முடியாது'
பிகாரின் நவேடா மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மத கலவரம் தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஜ்ரங் தள தொண்டர்களை, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிதீஷ் குமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தவறிழைத்தவர்கள் என அரசு நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது முறையற்றது. அவர்களை கைது செய்த நடவடிக்கை தவறானது என கருதினால், நீதிமன்றத்தை அணுகலாம். மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் எனது அரசு அனுமதிக்காது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.