மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதவி விலக காங். வலியுறுத்தல்
குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து கெளரவித்த விவகாரத்தில் விமர்சனங்களுக்குள்ளான மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து கெளரவித்த விவகாரத்தில் விமர்சனங்களுக்குள்ளான மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் மெளனம் சாதித்து வருவது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அலிமுதீன் அன்சாரி என்பவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அவரை கடந்த ஆண்டு அடித்துக் கொன்றனர். அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களில் 11 பேருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல்முறையீடு செய்து அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், அவர்களில் 8 பேர், ஜெயந்த் சின்ஹாவை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது அவர்களுக்கு மாலையிட்டு ஜெயந்த் சின்ஹா கெளரவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹாவின் தந்தையும், மத்திய முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, எனது மகனின் செயலை நான் ஏற்கவில்லை' என்றார். இந்தச் சூழலில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு வெறுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. அவை குறித்து பிரதமர் மோடியம், பாஜக தலைவர் அமித் ஷாவும் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை. மாறாக, மெளனத்தையே அவர்கள் பதிலாக அளிக்கின்றனர்.
இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பாரபட்சமின்றி பிரதமர் மோடி எப்போது கண்டனம் தெரிவிக்கப் போகிறார்? அல்லது இதன் மூலமாக அரசியல் ஆதாயம் அடையலாம் எனக் கருதுகிறாரா? அவரது தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஜெயந்த் சின்ஹா, கொலை குற்றவாளிகளுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். அவரை பிரதமர் மோடி நீக்கவில்லை என்றால், ஜெயந்த் சின்ஹாவே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்றார் அவர்.