முகப்பு
இந்தியா

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; ரயில்கள் தாமதம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பெய்த கனமழை காரணமாக அந்த நகரத்தில் திங்கள்கிழமை இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது

Updated On : 10 ஜூலை, 2018 at 1:14 AM
மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், அண்டை நகரமான தாணேவின் ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ள தண்டவாளத்தை கடக்கும் பயணிகள். 
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பெய்த கனமழை காரணமாக அந்த நகரத்தில் திங்கள்கிழமை இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த பருவமழைக் காலத்தில், மும்பையில் இதுவே அதிகபட்ச மழைப் பொழிவாக கணக்கிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே உத்தரவு பிறப்பித்தார். தண்டவாளங்களில் நீர் தேங்கியதை அடுத்து ரயில்கள் 15 நிமிடங்கள் வரையில் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் அலுவலகம் செல்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக மும்பை நகரின் தெருக்களில் முழங்கால் அளவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. பால்கர் மாவட்டத்தின் வசாய் பகுதியில் மழை நீர் பெருமளவு தேங்கியதால் சுமார் 300 குடியிருப்பு வாசிகள் தங்களது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
மழை நீர் தேக்கத்தால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடியே சென்றன. தண்டவாளங்கள் நீரில் மூழ்கிய இடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. பிற தடங்களில் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாகவும், சேவை முடங்கவில்லை என்றும் மேற்கு மண்டல ரயில்வே தெரிவித்துள்ளது. மத்திய ரயில்வே மண்டலத்திலும் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
கனமழையால் குர்லா, சியான், தாதர் பகுதிகளுடன், அண்டை மாவட்டங்களின் மிரா சாலை (தாணே மாவட்டம்), நல்லாசோபரா, வசாய் (பால்கர் மாவட்டம்) ஆகிய பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன. பிருஹன்மும்பை மின்விநியோக மற்றும் போக்குவரத்து சேவை நிறுவனத்தின் பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், சேவை ரத்து செய்யப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கனமழையால் மும்பை விமான நிலையப் பகுதியில் காண்பு நிலை அளவு குறைவாக இருந்தபோதிலும், விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும், அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி, மும்பையில் செவ்வாய்க்கிழமை வரையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 170.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த சீசனில் இது அதிகபட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவை வளாகத்தில் மழை நீர்: இதனிடையே, கனமழை காரணமாக மாகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை வளாகத்தில் மழை நீர் புகுந்தது தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார். 
முன்னதாக, மின் தடை காரணமாக வெள்ளிக்கிழமை பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.