முகப்பு
இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் இல்லை: நிர்மலா சீதாராமன்

பிரான்ஸுடன் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதில் ஊழல் நடைபெறவில்லை என்று மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின் நூலை வெளியிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ப்ரே, 
பகிர்:

பிரான்ஸுடன் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதில் ஊழல் நடைபெறவில்லை என்று மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நோக்கில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு ஊழல் புகாரும் எழவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கிறோம். அதேநேரம், எதிர்தரப்பிலிருந்து அத்துமீறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் நமது ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுப்பார்கள். எல்லையைப் பாதுகாக்கும் பணியில் நமது ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள்.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது பாதுகாப்பு அமைச்சகத்தின் கடமை.
ரமலான் மாதத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது வெற்றி பெற்றதா? அல்லது தோல்வி அடைந்ததா? என்பதை மதிப்பீடு செய்யும் பணி பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு இல்லை என்றார் அவர்.
ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ரஷியாவிலிருந்து பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது என்பதை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது' என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
இந்த ஆண்டில் கடந்த வாரம் வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் 908 முறை எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் 860 முறை அத்துமீறித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸுடன் ரூ.58ஆயிரம் கோடிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த வகை விமானங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவுக்கு பிரான்ஸ் விநியோகம் செய்யவுள்ளது.
தனது தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரான்ஸுடன் போர் விமானங்கள், ஆயுதங்கள், உபகரணங்கள் வாங்குவதற்காக மதிப்பிட்டிருந்த தொகையைக் காட்டிலும் அதிக விலைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. உபகரணங்கள், ஆயுதங்கள் எவ்வளவு தொகைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அந்த விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →