முகப்பு
இந்தியா

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை: மகாராஷ்டிர ஹோட்டல்களில் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

மண்ணுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் வந்த பிறகு மனிதர்களின் வாழ்வியல் முறை மிக எளிதாக மாறிவிட்டது என்னவோ உண்மைதான்.

Updated On : 26 ஜூன், 2018 at 12:06 PM
பகிர்:


மண்ணுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் வந்த பிறகு மனிதர்களின் வாழ்வியல் முறை மிக எளிதாக மாறிவிட்டது என்னவோ உண்மைதான்.

போகும் வழியில் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், எந்த சேவையையும் பெறலாம் என்ற எளிய வசதிக்கு பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

ஆனால் தற்போது பிளாஸ்டிக் ஒழிப்புக் கொள்கையை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. முதல் கட்டமாக மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை, ஸ்பூன், தட்டுகள், பாட்டில்கள், தெர்மகோல் பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்ய தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை கடந்த 24ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

முன்னேற்பாடுகளை செய்யாமல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக பிளாஸ்டிக் தடையால் ஹோட்டல் கடைக்காரர்கள் எப்படியெல்லாம் தங்களது நடைமுறைகளை மாற்றியுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.

உணவி விடுதிகளில் உணவருந்தாமல் வீட்டுக்கு உணவுகளை வாங்கிச் செல்ல விரும்புவோருக்கு எவர்சில்வர் கேரியர்களில் உணவைக் கொடுத்து வருகிறார்கள்.

உணவை சாப்பிட்ட பிறகு, அந்த கேரியரை, வாடிக்கையாளர் திரும்பக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அதே சமயம், கேரியருக்கு முன்பணமாக ரூ.200 வரை  உணவு விடுதி உரிமையாளர்கள் வசூலித்துக் கொள்கிறார்கள். கேரியரை திரும்பக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்லலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம் என்கிறார்கள் உணவு விடுதி உரிமையாளர்கள்.

அதே சமயம், ஸ்விக்கி, ஸோமாட்டோ போன்ற செயலியின் அடிப்படையில் இயங்கும் உணவகங்கள், மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் தங்களது பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், முன்னேற்பாடுகளை செய்து கொள்ள கால அவகாசம் அளித்துவிட்டு மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநில அரசு விதித்த பிளாஸ்டிக் தடையில் இருந்து ஆன்லைன் நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன. இதற்கு 3 மாத அவகாசத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. அதே சமயம், இனி ஆன்லைனில் பொருட்களை வாங்குவோருக்கு கூடுதல் பேக்கேஜிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.