முகப்பு
இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பந்திபோரா மாவட்டத்தின் ஹாஜின் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீஸார், எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து வியாழக்கிழமை காலை அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு, அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த அந்த பயங்கரவாதி காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல. எனவே, பாகிஸ்தானில் இருந்து ஊருவியிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு இதேபகுதியில் குண்டு காயங்களுடன் பயங்கரவாதியின் உடல் மீட்கப்பட்டது. வேறு இடத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் காயத்துடன் தப்பிய அவர், பின்னர் இப்பகுதிக்கு வந்தபோது உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, ஹாஜின் பகுதியில் தேடுதல் பணியும், கண்காணிப்புப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாத அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →