இந்தியா

பெண் சிசுக் கொலைகள் தேசத்தின் அவமானம்: பிரதமர் மோடி

DIN

பெண் சிசுக் கொலை சம்பவங்கள் தேசத்தின் மிகப் பெரிய அவமானம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இத்தகைய அவல நிலையை நிகழ்கால சந்ததியினர் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேசப் மகளிர் தினத்தையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு பகுதியில் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக 'பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தை 640 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அரசின் நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.
பெண்கள் நலப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அவர்களிடம் பிரதமர் அப்போது கலந்துரையாடினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
சமகால இந்தியாவில் ஆண் - பெண் என்ற பாகுபாடுகளை வரையறுக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாகை சூடி வருகின்றனர். கல்விக் கூடத்தில் இருந்து விளையாட்டுக் களம் வரை காணும் இடங்களில் எல்லாம் பெண்கள் புதிய சாதனைகளைப் படைக்கின்றனர். 
உலகில் அனைவருமே சமம். அதில் பாலின பாகுபாடு எங்கிருந்து வந்தது? ஆண்களுக்கு கிடைக்கும் தரமான கல்வியும், வசதிகளும் பெண்களுக்கும் சென்றடைவது அவசியம்.
இந்த சமூகத்தை உற்று நோக்கினாலே, நாட்டுக்கு பெருமை தேடித் தந்ததில் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மை புரிந்துவிடும்.
ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இடையே வேற்றுமை பாராட்டக்கூடாது. மகள்கள் ஒருபோதும் சுமையல்ல; மாறாக, அவர்கள் குடும்பத்தின் கெளரவச் சின்னங்கள். ஆண் குழந்தைகளுக்கு நிகரான அனைத்து ஊட்டச் சத்துகளும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். 
அடுத்ததாக நாட்டின் பெரும் அவமானமாக விளங்குபவை பெண் சிசுக் கொலைகள். இத்தகைய அவல நிலையை அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து அகற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் குழந்தைகளை பேணிக் காப்பதற்கான முதன்மையான பொறுப்பை மாமியார்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசின் பட்ஜெட் திட்டங்களின் வாயிலாக மட்டுமே பெண் சிசுக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியாது. அனைவரது ஒத்துழைப்பு இருந்தால்தான் அதை சாத்தியமாக்க முடியும். பயனற்றுப் போன பழமைவாத சிந்தனைகளையும், மூடநம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டு 18-ஆம் நூற்றாண்டு மனநிலையில் வாழ்பவர்களை 21-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என எப்படிக் கூற முடியும்?
புதிய இந்தியாவைப் படைப்பதற்கு, பெண்களின் வாழ்க்கையை மாற்றுவது முக்கியம் அல்ல. பதிலாக பெண்களுக்கான உரிமையைப் போற்றுவதுதான் முக்கியம் என்றார் பிரதமர் மோடி.
சத்தீஸ்கர் மூதாட்டிக்கு புகழாரம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கன்வர் பாய் என்ற மூதாட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், கோட்டாபரி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்வர் பாய் (106). தள்ளாத வயதிலும், தன்னிடம் இருந்த ஒரே சொத்தான ஆடுகளை விற்று விட்டு, தனது வீட்டில் கழிப்பறைகளைக் கட்டினார். தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனது பங்களிப்பை செலுத்திய கன்வர் பாய், நிகழாண்டு தொடக்கத்தில் காலமானார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கன்வர் பாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிமை சில பதிவுகளை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மனிதகுல வரலாற்றில் சில பெண்கள் தங்களது அளப்பரிய பங்களிப்பால் வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தை பதிவு செய்து விட்டுச் செல்கிறார்கள். இதேபோல், சத்தீஸ்கரைச் சேர்ந்த கன்வர் பாய் என்ற மூதாட்டி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அந்த மாநிலத்துக்குச் சென்றபோது, அவரை சந்தித்த தருணங்கள் எப்போதும் என் நினைவில் நீங்கா இடம்பெற்றுள்ளன என்று பிரதமர் மோடி தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT