இந்தியா

சமூக வலைதளங்கள் போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளன: ராஜ்நாத் சிங்

DIN

சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கிறது. இது போலீஸாருக்கு பெரும் சவாலான பிரச்னையாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இப்போது இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூகவலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். அதில் தேவையில்லாது நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி, அதில் கிடைக்கும் தகவல்களையும் எவ்வித முன்யோசனையும் இன்றி மற்றவர்களுடன் பகிர்ந்து, தங்களை அறியாமலேயே வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதையே, சமூகவிரோதிகள் தங்களுடைய நவீன ஆயுதமாகப் பயன்படுத்தி வன்முறை, கலவரம் போன்ற பிரச்னைகளை தூண்டி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை தொடங்கிய ஆசிய-பசிபிக் பிராந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக பேசியதாவது:
காவல்துறையின் பணிக்கு சமூக வலைதளங்கள் இப்போது பெரும் சவாலாக உள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தூண்டுதல், தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அவதூறான செய்திகளைப் பரப்புவது, நிதி மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளைச் செய்வது, இணையதள வைரஸ்களைப் பரப்புவது, போதைப் பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் பரிமாற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பயங்கரவாதத்தை பரப்புவது உள்ளிட்ட குற்றங்கள் சமூகவலைதளங்கள் மூலம் நிகழ்வது அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, 2013-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் முசாஃபர்நகர் கலவரத்தின்போது சமூகவலைதளங்கள் மூலம்தான் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் அதிகம் பரப்பப்பட்டன. 2012-ஆம் ஆண்டு வடகிழக்கு மாநில மக்கள் தென்னிந்தியாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேற இதுபோன்ற சமூகவலைதள வதந்திதான் காரணமாக அமைந்தது. ஐஎஸ் பயங்கரவாதிகள் இணையதளத்தையும், சமூகவலைதளங்களையும் பயன்படுத்திதான் ஆள் சேர்த்தனர்.
இப்போது இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஏனெனில், ஒரு தரப்பினர் இதனை ஒரு புதிய தொழிலாக நடத்தத் தொடங்கியுள்ளனர். இவற்றைத் தடுக்க இணையப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றார் ராஜ்நாத் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT