இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: தண்டனையை திரும்பப் பெற கோரும் பேரறிவாளனின் மனு தள்ளுபடி

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நிகழாண்டு ஜனவரி 22-ஆம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சிபிஐ அதிகாரி அளித்த தவறான தகவல்கள் காரணமாக எனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையைத் திரும்பப் பெற வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், சிபிஐ அளித்த பதிலில், 'மனுதாரரின் (பேரறிவாளன்) மேல்முறையீடு, மறு ஆய்வு மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரிடமும் குடியரசுத் தலைவரிடமும் மனுதாரர் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கருணை மனுக்கள் மீது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவால் தண்டனை குறைக்கப்பட்டதே தவிர, விசாரணையில் குறைகள் இருந்ததாகத் தெரிவித்து தண்டனை குறைக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மனுதாரரின் பங்கு குறித்து தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 'கொலை வழக்கில் தொடர்பில்லை; அப்பாவி' என (பேரறிவாளன்) மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துள்ளதாகக் கூறி, எந்தவித அடிப்படையும் இன்றி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே, 1998, மே 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை நீதிசார் நலன் கருதி உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். மனுதாரருக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோயி, ஆர். பானுமதி, எம். சந்தான கெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்ததது.
அப்போது பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கோபால் சங்கர நாராயணன், பிரபு சுப்ரமணியன் ஆகியோர், விசாரணை அதிகாரி வி. தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்தை வாசித்துக் காண்பித்தனர். அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினர். 
இதைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, பேரறிவாளனுக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்த தொடர்பு, கொலையில் பேரறிவாளனின் பங்கு உள்ளிட்டவற்றையும் வாதத்தில் முன்வைத்தார்.
இதையடுத்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1998, மே 11-ஆம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் சிபிஐ சிறப்பு விசாரணை அமைப்பான எம்டிஎம்ஏவுக்கு உத்தரவிடப்படுகிறது' என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

SCROLL FOR NEXT