இந்தியா

எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயிக்க வெளி அமைப்பு அவசியம்

DIN

எம்.பி.க்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிப்பதற்கு வெளி அமைப்பு அவசியம் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி யோசனை தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள நவ்ரச்னா பல்கலைக்கழகத்தில் 'புதிய இந்தியாவுக்கான சிந்தனைகள்' என்ற தலைப்பில் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருண் காந்தி பேசியது:
நாடாளுமன்ற அவைகள் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளபோதிலும், எம்.பி.க்களின் ஊதியம், சலுகைகள் ஆகியவை அதிகரித்து வருகின்றன. 
எம்.பி.க்களின் ஊதியம் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றம் இயங்குகிறது. 1952-72 காலகட்டத்தில் இது ஆண்டுக்கு 130 நாட்களாக இருந்தது. இதை நாம் உயர்த்தினோமா?
பணக்கார எம்.பி.க்களை தங்களது எஞ்சிய பதவிக் காலம் முழுவதற்குமான ஊதியத்தைத் துறக்குமாறு கோருவதற்கு ஓர் இயக்கத்தைத் தொடங்குமாறு நான் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதினேன்.
மக்களவையில் 180 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் உள்ள 75 எம்.பி.க்களும் தங்களுக்கு ரூ.25 கோடி அல்லது அதற்கும் மேல் வருமானம் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். அவர்கள் தங்களது ஊதியத்தைத் துறந்தால் அரசுக் கருவூலத்தில் சில நூறு கோடிகளை மிச்சப்படுத்த முடியும். சமத்துவமின்மை அதிகரித்து வருவது சமூகத்துக்குத் தீமையாக முடியும். 
பிரிட்டனில் எம்.பி.க்களின் ஊதியம் இதே காலகட்டத்தில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. அங்கு அவர்களின் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஆலோசனை அளிக்க வெளி அமைப்பு ஒன்று உள்ளது. 
அதேபோல் நம் நாட்டிலும் வெளி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். ஏனெனில் எம்.பி.க்களின் ஊதியத்தை தற்போது எம்.பி.க்களே நிர்ணயிக்கும் நிலை உள்ளது. ஒருவரது ஊதியத்தை அவரே தீர்மானிப்பது ஜனநாயக நெறிகளுக்கு உகந்ததாக இருக்காது.
ஆசிரியைகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் போன்ற சாதாரண பெண்களும் அரசியலில் நுழைவதை ஊக்கப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 
அதேவேளையில் அந்த ஒதுக்கீடானது அரசியல்வாதிகளின் மனைவிகள், பெண்கள், உறவினர்கள் ஆகியோருக்கு வழங்கப்படக் கூடாது என்றார் வருண் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT