முகப்பு
இந்தியா

பிரதமர் பலவீனமாக இருப்பதே பல்வேறு கசிவுகளுக்கும் காரணம்

சிபிஎஸ்சி வினாத்தாள் உள்பட பல்வேறு விஷயங்கள் கசிந்துள்ளதற்கு பிரதமர் பலவீனமாக இருப்பதே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:17 AM
பகிர்:

சிபிஎஸ்சி வினாத்தாள் உள்பட பல்வேறு விஷயங்கள் கசிந்துள்ளதற்கு பிரதமர் பலவீனமாக இருப்பதே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக எத்தனை கசிவுகள் ஏற்பட்டு விட்டன. தகவல் கசிவு, ஆதார் கசிவு, எஸ்எஸ்சி தேர்வு வினாத் தாள் கசிவு, தேர்தல் தேதி கசிவு, சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிவு. எல்லா விஷயங்களிலும் கசிவு ஏற்படுகின்றன. இதற்கு நாட்டின் காவல்காரர் (பிரதமர்) பலவீனமாக இருப்பதே காரணம் என்று ராகுல் காந்தி அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிந்ததைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு கணிதம் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. இனி கசிவுகள் ஏற்படாததை உறுதிப்படுத்த ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அண்மையில் நிகழ்ந்த கசிவு குறித்து அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராகுலின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பிரதமர் பலவீனமானவர் என்று தங்களின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்த நிலையை ராகுல் நினைவுபடுத்திப் பார்த்துள்ளார்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.