முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி மலரும்: அமித் ஷா உறுதி

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.

Updated On : 14 மே, 2018 at 5:41 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2 தொகுதிகள் நீங்கலாக, 222 தொகுதிகளில் சனிக்கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும், ஆட்சியமைப்பதில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தெவெ கெüடா முக்கியப் பங்காற்றுவார் என்றும் பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கோவா மாநிலம், பனாஜியில் பாஜக தொண்டர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் காணொலி உரை திரையிடப்பட்டது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் அவர், விரைவில் கோவா திரும்புவதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
மனோகர் பாரிக்கர், நிர்வாகத் திறமை மிக்க கடின உழைப்பாளி. அவர், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தபோதுதான், ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி ராணுவ தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 
அந்த தாக்குதலில், நமது ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். அடுத்த 10 நாள்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. நமது ராணுவ வீரர்களைக் கொன்றதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, இந்த துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. 
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக, தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைக் கொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 
கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றார் அவர்.
இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம்: இதனிடையே, தில்லியில் அமித் ஷா தலைமையில், பாஜக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியிலான செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் உள்பட தொடர்ச்சியாக அடுத்தடுத்து தேர்தல் வரவிருப்பதால், கட்சித் தொண்டர்களை தயார்படுத்துவதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.