முகப்பு
தமிழ்நாடு

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுமா என்ற தவிப்பில் தவெக வேட்பாளர்கள் உள்ளனர்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:00 PM
தேர்தல் பிரசாரம் - PTI
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:54 AM

சென்னை: தேர்தல் என்றாலே, வாக்குப்பதிவு ஒருநாளும், வாக்கு எண்ணிக்கை ஒருநாளும் நடைபெற்று முடிந்துவிடும். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே, கட்சிகள் தங்களது சூறாவளி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இத்தனை நாள்கள், இவ்வளவு வெய்யிலில் அலைந்து திரிந்து ஆளுங்கட்சி முதல், மிகப்பெரிய கட்சி, சிங்கிளாக களம் காணும் கட்சித்தலைவர்களும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருபக்கம் காலை நடைப்பயணம் முதல் இரவு பிரசாரக் கூட்டம் வரை நாள் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலினும், ஒருநாள் தவறாமல் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அனைத்து வேட்பாளர்களுக்கும் தீவிர பிரசாரம் செய்துவரும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே, புதிதாக தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தவெக வேட்பாளர்கள் திணறிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

அதிலும் குறிப்பாக, திமுக, அதிமுகவின் மிக முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் தொகுதிகளில், அவர்களுக்கு சரி சமமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பிரசாரம் செய்து, உங்கள் ஊரில் நாங்களும் போட்டியிடுகிறோம் என்று சொல்லக்கூட முடியாத நிலை தவெகவினருக்கு இருப்பதாகவே பல ஊர்களில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

ஏற்கனவே தேர்தல் அனுபவம் இல்லாததால், மக்களை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி பிரசாரம் மேற்கொள்ளும் கலை அல்லது வித்தை இன்னும் தவெகவினருக்கு கைவரவில்லை. தவெக தலைவர் விஜய் ஓரிடத்தில் பிரசாரம் செய்கிறார் என்றால், அங்கே குவியும் கூட்டத்தையும், உள்ளூர் தவெகவினரால் மிகச் சிறப்பாகக் கையாள முடியவில்லை.

முன்னணி கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களுக்கும் சென்று வீடு வீடாகச் செல்வது பேருந்தில் ஏறுவது, மெட்ரோவில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது என பிரசாரத்தில் தூள் கிளப்பி வரும் நிலையில், தவெகவினரோ நட்சத்திரப் பேச்சாளர்கள், தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதில் பின்தங்கியே இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, சென்னையில் பிரசாரத்தில் ஈடுபடும் தவெகவினருக்கு, தேர்தல் செலவினத்துக்கான பணமும் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு தொண்டருக்கு ரூ.1000 வரை செலவாகிறது. ஆனால், இரண்டு வாரத்துக்கான செலவினம் இன்னமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மேலும் பலரை அழைத்துக் கொண்டு வீடு வீடாகச் செல்வதே குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறதாம்.

கட்சித் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகியும், திராவிடக் கட்சிகளுக்கு இணையாக இன்னமும் பல்வேறு பகுதிகளில் கட்சியின் செயல்பாடுகள் வளரவில்லை என்றும் சிலர் புலம்புகிறார்கள்.

அதனால்தான் சமூக ஊடகங்கள் வழியாக தவெகவினர் அதிகம் பிரசாரம் செய்து வருகிறார்கள். செல்போன் வழியாக மக்களை எளிதாக சென்றடையலாம் என்று தவெகவினர் முடிவெடுத்து திட்டமிட்டு விடியோக்களை வெளியிட்டு வருகிறார்களாம்.

உண்மையிலேயே தலைவர்கள் மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து, பிரசாரம் செய்து, பேசு, வாக்குறுதி கொடுத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது மக்களிடையே எடுபடுமா? என்பது தெரியாமல் தவெகவினர் தவித்து வருகிறார்கள்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:59 AM
summary

Are campaigns really reaching the people? Candidates are in a state of despair!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.