பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்: குடியரசுத் தலைவருக்கு மன்மோகன் சிங் கடிதம்
எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருவதாக குடியரசுத் தலைவருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
புது தில்லி: எதிர்க்கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருவதாக குடியரசுத் தலைவருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை குடியரசுத் தலைவர் எச்சரிக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மன்மோகன் சிங் எழுதியிருக்கும் கடிதத்தில், பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார். பிரதமராக இருப்பவர் மிரட்டும் தொனியில் பேசக் கூடாது என்று குடியரசுத் தலைவர் எச்சரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, வேறு எந்த கட்சியினரையும் மிரட்டும் தொனியில் பிரதமர் பேசக் கூடாது. காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், இதற்கு முன்பிருந்த அனைத்து பிரதமர்களும், தங்களது பதவிக் காலத்தின்போது, எந்த நிகழ்ச்சி பங்கேற்று உரையாற்றினாலும், தங்களது உரையின் போது பிரதமர் பதவிக்கான கண்ணியத்தையும், மரியாதையும் கடைபிடித்தனர். ஆனால், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசி வருவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தோடு, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கடந்த 6ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் உரை அடங்கிய விடியோவையும் மன்மோகன் சிங் இணைத்துள்ளார்.