கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியே தீர்வு: முன்னாள் தேர்தல் ஆணையர்
கர்நாடகத்தில் எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகும்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல்
கர்நாடகத்தில் எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகும்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் நடைமுறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் அங்கு எழுந்தன. முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா, மூன்றே நாள்களில் தனது பதவியைத் துறக்க நேர்ந்தது. இதற்கு நடுவே, மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களுக்கு பணமும், பதவியும் தருவதாக பேரம் பேசப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
கர்நாடகத்தில் இத்தனை களேபரங்கள் நிகழ்ந்தது தேசிய அளவில் எதிரொலித்தது. இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியத் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் தேவை. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்காமல், வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விகிதத்தைப் பொருத்து முடிவை அறிவிக்க வேண்டும்.
33.33 சதவீத வாக்குகளோ அல்லது அதற்கு அதிகமாகவோ பெற்ற வேட்பாளர்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒரு தொகுதியில் எந்த வேட்பாளரும் அந்த வாக்கு சதவீதத்தைப் பெறாவிட்டால், அங்கு மறுதேர்தல் நடத்தலாம்.
வெளிநாடுகளில் அந்த விகிதம் 50 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் உடனடியாக அந்த நடைமுறையைக் கொண்டுவர முடியாது. முதலில் 33 சதவீத வாக்கு விகித வரம்பை நிர்ணயித்துவிட்டு, அதன் பிறகு 10 ஆண்டுகளில் அதை 50 சதவீதமாக அதிகரிக்கலாம். அதேபோன்று தேர்தலுக்காக தனி நிதித் தொகுப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நிதியுதவி அளிக்கும் பெரு நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் 100 சதவீத வரிச் சலுகை அளிக்க வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்கள் தற்போது மிக அவசியம்.
கர்நாடகத்தைப் பொருத்தவரை குடியரசுத் தலைவர் ஆட்சியை மூன்று மாதங்களுக்கு அமல்படுத்தியிருக்கலாம். அந்த காலகட்டத்துக்குள் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்காதபோது மீண்டும் தேர்தலை நடத்த கர்நாடக ஆளுநர் பரிந்துரை செய்திருக்கலாம். அப்போதுதான் குதிரை பேரங்களைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.