இந்தியா

அலோக் வர்மாவிடம் சிவிசி நடத்திய விசாரணை விவரங்களை இன்று கேட்டறிகிறது உச்சநீதிமன்றம்

DIN

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம், மத்திய ஊழல் கண்காணிப்பு (சிவிசி) ஆணையம் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டறியவுள்ளது. இதுதொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய இருநபர் அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.
 முன்னதாக, அலோக் வர்மாவுக்கு எதிரான புகார்கள் குறித்து இரண்டு வார காலத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 26-ஆம் தேதி சிவிசிக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அந்த விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக ஏ.கே.பட்நாயக் என்ற ஓய்வுபெற்ற நீதிபதியையும் நியமித்தது.
 அந்த விசாரணைக் காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
 சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவியது. அதே சமயம், ஒருவரை எதிர்த்து ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கினர். அலோக் வர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமைச்சரவை செயலருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ராகேஷ் அஸ்தானா கடிதம் எழுதினார்.
 இதேபோல், வழக்கில் சிக்கிய ஒருவரை அதில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக சிபிஐ அமைப்பே வழக்குப்பதிவு செய்தது.
 இந்தச் சூழலில், அவர்கள் இருவரையும் பொறுப்பில் இருந்து விடுவித்ததுடன், கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
 மேலும், நாகேஸ்வர ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐயின் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
 உச்சநீதிமன்றத்தில் வழக்கு: சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள மறு விசாரணை இரு நபர் அமர்வில் நடைபெறவிருக்கிறது.
 முன்னதாக, கடந்த மாதம் 26-ஆம் தேதி விசாரணை நடத்தியபோது, அலோக் வர்மாவிடம், முதல்கட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்குள் நடத்தி முடிக்குமாறு சிவிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 மேலும், சிபிஐ பொறுப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ், கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதிகாரிகள் பணியிடமாற்றம், விசாரணைக் குழுக்களை மாற்றியமைப்பது தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்டு 12-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT