இந்தியா

சிபிஐ இயக்குநர் மீதான விசாரணை: உச்சநீதிமன்றத்தில் முதல்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது சிவிசி

DIN

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்திய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), தனது முதல்கட்ட அறிக்கையை, மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.
 அந்த அறிக்கையை வழக்கிற்கான ஆதாரமாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே. கெüல் ஆகியோர் அடங்கிய அமர்வு பதிவு செய்துகொண்டது. சிவிசி தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த சிவிசி விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் கண்காணித்ததாக நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார்.
 அப்போது, உச்ச நீதிமன்ற பதிôவாளர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டபோதிலும், சிவிசி தனது அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக ஏன் பதிவாளருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை? என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கேள்வி எழுப்பினார்.
 அதற்காக வருத்தம் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, அறிக்கையை சமர்ப்பிப்பதில் தங்களது தரப்பில் சற்று தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இதனை ஏற்ற நீதிபதிகள் அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 இதனிடையே விசாரணையின்போது, இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், கடந்த அக்டோபர் 23 முதல் 26-ஆம் தேதி வரையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
 பின்னணி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி நிலவியது. இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கினர்.
 இந்தச் சூழலில், அவர்கள் இருவரையும் பொறுப்பில் இருந்து விடுவித்து, கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. நாகேஸ்வர ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐயின் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை கடந்த மாதம் 26-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அலோக் வர்மாவிடம் முதல்கட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்குள் நடத்தி முடிக்க சிவிசிக்கு உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT