இந்தியா

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு மனு தாக்கல்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்கக் கோரி, அக்கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து, உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். எனினும், 4:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் மேற்கண்ட தீர்ப்பு வெளியிடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நாள்களில், சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை அண்மையில் பரிசீலித்த உச்சநீதின்றம், மறுஆய்வு மனுக்கள் மீது அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெண்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, சபரிமலையில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதனால், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு நிலவுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது மண்டல பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT