இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: நீதி கிடைக்க மத்திய அரசு துணை நிற்கும்: ரவிசங்கர் பிரசாத்

DIN


1984- ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு துணை நிற்கும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கடந்த 1984, அக்டோபர் 31-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப் பாதுகாவலரால் (சீக்கியர்) சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. 
இந்தக் கலவரத்தால் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். சீக்கியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர். இந்தக் கலவரத்துக்கு நீதி கேட்டு சீக்கிய அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. இந்நிலையில், இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யஷ்பால் சிங்குக்கு மரண தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியின் விவரம்: 
தில்லியிலும் அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சகித்துக் கொள்ள முடியாதது. இந்திரா காந்தி கொலையுண்டு, 2 வாரங்களுக்குப் பிறகு, தில்லி போட் கிளப்பில் உரையாற்றிய ராஜீவ் காந்தி, மக்கள் கோபத்தில் உள்ளனர். மிகப்பெரிய விருட்சம் ஒன்று பெயர்ந்து விழும் பொழுது அந்த நிலம் சற்று அதிரவே செய்யும் என்று சீக்கியர் படுகொலைகளை நியாயப்படுத்திப் பேசினார். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில், சீக்கியர் படுகொலைக்காக மனம் வருந்தவும் இல்லை. மன்னிப்புக் கோரவும் இல்லை. ராஜீவ் காந்தியின் கருத்து காங்கிரஸ் கட்சியும் மன்னிப்புக் கோரவில்லை.
இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜகதீஷ் டைட்லர், சஜன்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. சீக்கியர் படுகொலை திட்டமிட்ட செயல் அல்ல எனத் தீர்ப்பளித்த முன்னாள் தலைமை நீதியரசர் ரங்கநாதன் மிஷ்ராவை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தது காங்கிரஸ். 
1984- ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 25 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, இந்தக் கலவரம் தொடர்பான நீதி விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியாலேயே 34 ஆண்டுகளுக்குப் பிறகே, அந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது. அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT