எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ள விமானப் படை தயார்: தலைமைத் தளபதி
எந்த விதமான அசம்பாவித சம்பவத்தையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் நமது விமானப் படை உள்ளது என்று தலைமைத்
எந்த விதமான அசம்பாவித சம்பவத்தையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் நமது விமானப் படை உள்ளது என்று தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
இந்திய விமானப் படையின் நிறுவன தினம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தனோவா கூறியதாவது: ஏதேனும் அசம்பாவிதம் பற்றி தகவல் கிடைத்தால், குறுகிய நேரத்தில் அதை எதிர்கொள்வதற்கு விமானப் படை வீரர்கள் தயாராக வேண்டியது அவர்களின் கடமையாகும். இதேபோல், போர்க் கருவிகளையும் அவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா, பிரான்ஸ் இடையே கடந்த 2016-இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக இடைமறி ஏவுகணைகள் வாங்குவதற்கு கடந்த வாரம் இந்தியா, ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஃபேல் போர் விமானங்கள், எஸ்-400 ரக இடைமறி ஏவுகணைகள், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், சினூக் பளுதூக்கி ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதால், நமது விமானப் படையின் போர்த்திறன் மேலும் அதிகரிக்கும். விமானப் படை வீரர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும். விபத்து காரணமாக, ஒரு விமானத்தை இழப்பதால், பணம் மட்டுமே விரயமாவதில்லை; மாறாக, நமது போர்த்திறன் வலிமையும் குறைகிறது.
தமிழகத்தில் தேனி, ஜம்மு காஷ்மீரில் கத்ரா, பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட் ஆகிய இடங்களில் காடு தீப்பற்றி எரிந்தபோதும், தில்லி புறநகரில் தீ விபத்து நேரிட்டபோதும் விமானப் படை விமானங்கள், மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன என்றார் அவர்.