சபரிமலை போராட்டம்: கேரளத்தின் ஒற்றுமை, மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் முயற்சி
சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபம் கருதி அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்புகிறார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபம் கருதி அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பிரச்னைகளை எழுப்புகிறார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும், கேரளத்தின் ஒற்றுமையையும், மதச்சார்பற்ற தன்மையையும் வேண்டுமென்றே கெடுக்க எண்ணுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை செயல்படுத்தப் போவதாக பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு அறிவித்ததை அடுத்து, அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக மாநிலத்தின் பல இடங்களிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸும், பாஜகவும் இந்த விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சித்து வந்தன.
இதுதொடர்பாக பினராயி விஜயன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள மாநிலம் அண்மையில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான போது, மக்கள் ஒன்றுகூடி அதை சமாளித்தார்கள். ஆனால் தற்போது கேரளத்தின் ஒற்றுமையையும், மதச்சார்பற்ற தன்மையையும் வேண்டுமென்றே சிலர் கெடுக்க எண்ணுகிறார்கள். சபரிமலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொண்ட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இந்த தீர்ப்பை சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்தவே அரசு விரும்புகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் திட்டமில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கேரள மாநிலம் எப்போதும் பெண்களின் முன்னேற்றத்துக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறி எதிர்க்கட்சிகளை தாக்கி பேசிய முதல்வர், காங்கிரஸும் பாஜகவும் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட எண்ணுகின்றனர். மதவாதிகளின் பிடியில் இருந்துகொண்டு காங்கிரஸ் தன்னைத் தானே அழித்து கொள்ள போகிறது. பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இதில் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளனர். பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில், ஹாஜி அலி தர்காவினுள் பெண்கள் நுழையலாம் என்ற மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கேரளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இதனிடையே, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை காக்க தவறி விட்டது. நாங்கள் வன்முறை போராட்டத்தை ஆதரிக்கவில்லை. பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே காங்கிரஸின் நிலைப்பாடு என்று கூறினார்.