கேரள அரசு பக்தர்களுக்கு எதிரான கம்யூனிச சதி வேலையில் ஈடுபட்டுள்ளது: அமித்ஷா
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது என்ற பெயரில், கேரள அரசு எடுத்து வரும் நவடிக்கைகள் பக்கர்தர்களுக்கும், கோயில்களுக்கு எதிரான
கண்ணூர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது என்ற பெயரில், கேரள அரசு எடுத்து வரும் நவடிக்கைகள் பக்கர்தர்களுக்கும், கோயில்களுக்கு எதிரான கம்யூனிச சதி வேலையில் ஈடுபட்டு வருவதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்டதாக கேரளம் முழுவதுமாக சுமார் 1,400 பேரை கைது செய்துள்ள மாநில காவல்துறை, அதுதொடர்பாக 450 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், பக்தர்கள் அதிகளவில் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சுரேஷ் குமார், அனோஜ் குமார் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு விசாரித்தது.
அப்போது, அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் மாநில அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நீதிபதிகள் அமர்வு எச்சரித்தது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுவதில் பக்தர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரித்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், சபரிமலைக்கு வருகை தருவது உண்மையான பக்தர்கள் தானா என்பதை காவல்துறையினர் விசாரிக்கவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசுகையில், கேரள மக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு பக்கபலமாக பாஜக நிற்கும்.
மத நம்பிக்கைகளுக்கும், அரசின் துன்புறுத்தல்களுக்கும் இடையே கேரளம் போராடி வருகிறது. சபரிமலை விவகாரத்தை மாநிலத்தில் ஆளும் இடதுசாரி அரசு தவறாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை குறி வைத்து கைது செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பக்தா்களை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானதாகும். உச்ச நீதிமன்றறம் பிறப்பித்த சில உத்தரவுகளை இந்த அரசு இதற்கு முன்பு அமல்படுத்தியதில்லை.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடும் பக்தா்கள் மீது வன்மத்தை காட்டக் கூடாது. ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது.
ஹிந்து பாரம்பரியத்தையும், சபரிமலை கோயிலின் புகழையும் கேரள அரசு அழிக்க நினைக்கிறது. அதை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது. பக்தா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்தால், பினராயி விஜயன் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அந்த அரசை கவிழ்க்கவும் பாஜகவினர் தயங்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்.
இடதுசாரி அரசு எடுத்து வரும் நவடிக்கைகள் கோயில்களுக்கு எதிரான கம்யூனிச சதி என்றும் சபரிமலை தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்கள், பாரம்பரியத்தை காப்பதற்கான போராட்டங்கள் என்றார்.
மேலும், சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ, அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. பலவிதமான விதிகளும், வழிபாடுகளும் அதுபோன்று உள்ளன என்பதையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என்று அமித்ஷா கூறினார்.