இடதுசாரி ஆர்வலர்களுக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய தகவல்களை எவ்வாறு வெளியிடலாம்? என்று மும்பை உயர்நீதிமன்றம் காவல்துறையினரை திங்கள்கிழமை கண்டித்தது.
மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய தகவல்களை எவ்வாறு வெளியிடலாம்? என்று மும்பை உயர்நீதிமன்றம் காவல்துறையினரை திங்கள்கிழமை கண்டித்தது.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு குறித்து பத்திரிகையாளர்களிடம் மகாராஷ்டிர மாநில காவல் துறை பொது இயக்குநர் பரம்வீர் சிங் வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது, கைது செய்யப்பட்டவர்களின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களை படித்து காட்டி, கடந்த வாரம் மற்றும் ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததற்கு இதுவே சாட்சி என்று பேசியிருந்தார்.
அதையடுத்து பீமா-கோரேகான் வன்முறையில் பாதிக்கப்பட்ட சதீஷ் கெய்க்வாத் என்பவர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றக் கோரி வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், புணே காவல்துறையினர் நியாயமற்ற முறையிலும், தவறான நோக்கத்துடனும் விசாரணை நடத்துகின்றனர். மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவு ஜீவிகளை கைது செய்தது துருதிஷ்டவசமானது. சட்ட விரோத செயல்கள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை மேற்கொள்வதே சரியானது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மிருதுளா பட்கர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியை சுட்டிக் காட்டி பேசிய நீதிபதிகள், வழக்குக்கு சாட்சியாக பயன்படுத்தக் கூடிய தகவல்களை போலீஸார் எவ்வாறு வெளியிட்டனர்? உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தின் முன் இருக்கும் ஒரு வழக்கின் தகவல்களை வெளியிட்டது தவறு என்று கூறினர். மேலும், மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம், புணேவில் எல்கார் பரிஷத்' என்ற மாநாடு நடந்தது. அதற்கு அடுத்த நாள் பீமா - கோரேகான் பகுதியில் கலவரம் வெடித்தது. அதையடுத்து சுதீர் தவாலே, ரோனா வில்சன், மகேஷ் ரொத் உள்ளிட்ட 5 பேரை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி போலீஸார் கைது செய்தனர்.
அதைப் போல, கடந்த செவ்வாய்க்கிழமை இடதுசாரி ஆர்வலர்கள் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டனர்.