ரிசர்வ் வங்கி ஆளுநர் 2 ஆண்டுகளை நிறைவு செய்தார் உர்ஜித் படேல்
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2 ஆண்டுகளை உர்ஜித் படேல் நிறைவு செய்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2 ஆண்டுகளை உர்ஜித் படேல் நிறைவு செய்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பொறுப்பேற்ற இவர், அரசின் நிதிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, காப்பீடு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் உரிமை கொள்கைகள் ஆகியவற்றை வகுப்பதில் முக்கியப் பங்காற்றினார். அதன் பின்னர், கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, அந்தப் பதவியை ஏற்றார்.
உர்ஜித் படேல் பொறுப்பேற்ற அடுத்த இரு மாதங்களில், உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கையால், பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து, மக்களின் துயரத்தைப் போக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று உர்ஜித் படேல் உறுதியளித்தார். அதன்படி, புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.
அதைத் தொடர்ந்து உர்ஜித் படேல் எதிர்கொண்ட மற்றொரு பிரச்னை வாராக் கடன். பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் துரிதமாக மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக, கவலை அளிக்கும் விதமாக இருந்த வங்கிகளின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் உர்ஜித் படேல் ஈடுபட்டுள்ளார்.
வழக்கமாக, ரிசர்வ் வங்கிக்கும், ஆளும் அரசுக்கும் இடையே சிறு பூசல்கள் அவ்வப்போது ஏற்படும். அவ்வாறின்றி, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் தொலைநோக்கு திட்டம், மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது, சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பது போன்ற அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில், அரசுடன் உர்ஜித் படேல் இணக்கமாக செயல்படுகிறார். இவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு நிறைவடைகிறது.