இந்தியா

வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க புதிய நடவடிக்கை: சிஆர்பிஎஃப்

DIN


மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) பணியாற்றும் வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் வகையில் அவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான புதிய திட்டத்தை சிஆர்பிஎஃப் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீரர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் உளவியல் சார்ந்த அறிவுரைகளை வழங்க சிஆர்பிஎப் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை அதிகாரி ஆர். ஆர். பட்நாகர் கூறியதாவது:
துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப்-இல் 3 லட்சம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, நக்ஸல் பாதிப்புள்ள மாநிலங்களில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் கிளர்ச்சிகளை தடுக்கும் வகையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கையில் உயிரிழக்கும் வீரர்களை விட, மாரடைப்பு, தற்கொலை போன்றவற்றால் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கை 15 மடங்கு அதிகமாக உள்ளது. தற்கொலைச் சம்பவங்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து வீரர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் அவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் எந்த விதமான பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய சில சோதனைகள் நடத்தி வருகிறோம். அந்த சோதனைகளின் முடிவுகளை வைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். அதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் டாடா சமூக அறிவியல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
இதுவரை தற்கொலை செய்து கொண்டவர்களின் காரணங்களை விசாரித்து வருகிறோம். அவர்களது தற்கொலைக்கு பெரும்பாலும் குடும்பம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக உள்ளன. தற்போது முதல் கட்டமாக சிஆர்பிஎப் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மேலும் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2016-ஆம் ஆண்டில், பணி சார்ந்த நடவடிக்கை அல்லாமல் வேறு காரணமாக 353 பேரும், மாரடைப்பில் 92 பேரும், தற்கொலை செய்து கொண்டு 26 பேரும் இறந்துள்ளனர். அடுத்த 2017-ஆம் ஆண்டில் பணி சார்ந்த நடவடிக்கை அல்லாமல் வேறு காரணமாக 435 பேரும், மாரடைப்பில் 156 பேரும், தற்கொலை செய்து கொண்டு 36 பேரும் இறந்துள்ளனர் என்று தெரிய வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT