இந்தியா

தற்கொலைப் படையினர் ஊடுருவல்: ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை

DIN


ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் என்று சந்தேகிக்கப்படும் 3 நபர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியதை அடுத்து புதன்கிழமை அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து, ஜம்மு காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் விவேக் குப்தா கூறியதாவது:
ஜம்மு நெடுஞ்சாலையில் ஜாஹர் கோட்லி பகுதியில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு டிரக்கை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அதில் ஏ.கே. ரக துப்பாக்கியும், 3 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த டிரக்கில் இருந்த மூவர் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, டிரக்குடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பாதுகாப்புப் படையினர் அந்த டிரக்கை விரட்டிச் சென்றபோது கத்ரா அருகே சுகேதார் என்ற இடத்தையொட்டி அந்த நபர்கள் டிரக்கை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த சுற்று வட்டாரப் பகுதியில் காவல்துறை, ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர் கொண்ட குழு தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வனப்பகுதியில் நுழைந்த அவர்கள், அங்கிருந்த வனப்பாதுகாவலர் ஒருவரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். காயமடைந்த வனப்பாதுகாவலர், உயிருக்கு பாதிப்பில்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆளில்லா விமானம் மூலமாக அடர்ந்த வனப்பகுதியில் அவர்களது நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிறோம். முன்னதாக சோதனையின்போது பிடிபட்டிருந்த அந்த டிரக்கின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
அவர்கள் அளித்த தகவலின்படி, கதுவா-சம்பா எல்லைப் பகுதியில் வைத்து அந்த மூவரும் டிரக்கில் ஏறியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீரின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகள், வைஷ்ணவி தேவி கோயிலுக்கான மலையடிவார முகாமாக இருக்கும் கத்ரா நகரிலும், அந்த நகருக்கு செல்லும் சாலைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விவேக் குப்தா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT