விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.- சி42 ராக்கெட்: 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து
பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.16) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி இரவு 10.08 மணிக்கு... திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.08 மணிக்கு ராக்கெட் "நோவா எஸ்.ஏ.ஆர்.' மற்றும் "எஸ்1-4' என்ற மொத்தம் 889 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்களையும் தாங்கி பலத்த சப்தத்துடன் தீயைக் கக்கியபடி சீறிப்பாய்ந்தது.
இந்த ராக்கெட்டிலிருந்து 17 நிமிடங்கள் 44 விநாடிகளில் இரண்டு செயற்கைக்கோள்களும் பிரிக்கப்பட்டு, திட்டமிட்டபடி பூமியிலிருந்து 583 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
வாழ்த்து தெரிவித்துக் கொண்ட விஞ்ஞானிகள்: ராக்கெட் ஒவ்வொரு நிலையைத் தாண்டும்போதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். செயற்கைக்கோள் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதும், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைக் பரிமாறிக்கொண்டனர்.
முழுவதும் வணிக ரீதியில்...இஸ்ரோ சார்பில் முழுவதும் வணிக ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம், பிரிட்டனின் சுர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதில் 445 கிலோ எடைகொண்ட சிறிய ரக "நோவா எஸ்.ஏ.ஆர்.' செயற்கைக்கோள், வன அளவீடு மற்றும் கண்காணிப்பு, நிலப் பகுதி பயன்பாடு மற்றும் பனிப் படலக் கண்காணிப்பு, வெள்ளம் மற்றும் பேரிடர் கண்காணிப்பு, கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு ஆகியவற்றுக்குப் பயன்பட உள்ளது.
அதே போன்று 444 கிலோ எடைகொண்ட "எஸ்1-4' செயற்கைக்கோள் வளங்கள் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நகர்ப்புற மேலாண்மை, பேரிடர் பாதிப்பு கண்காணிப்பு போன்ற பணிகளுக்காக பயன்பட உள்ளது.
5 மாதங்களுக்குப் பின்...
பி.எஸ்.எல்.வி.-சி42 திட்டம், ஐந்த மாதங்களுக்குப் பின்னர் இஸ்ரோ பெற்றிருக்கும் வெற்றித் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி41 ராக்கெட் மூலம் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஐ வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஐ செயற்கைக்கோள் திட்ட வெற்றிக்குப் பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், 2018-ஆம் ஆண்டைப் பொருத்தவரை இஸ்ரோ அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த 8 மாதங்களில் 9 செயற்கைக்கோள் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 5.7 டன் எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி.-மார்க்3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 செயற்கைக்கோள், சந்திரயான்-2 என தொடர்ந்து திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
ஆனால், சந்திரயான்-2 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த இஸ்ரோ, கடந்த 5 மாதங்களாக எந்தவொரு ராக்கெட் அனுப்பும் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. இப்போது, 5 மாதங்களுக்குப் பின்னர், முழுவதும் வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் மூலம் பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான இரு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தியதன் மூலம், போட்டி அதிகம் நிறைந்த இந்தத் துறையில் இந்தியாவில் திறமை நிலைநாட்டப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.