இந்தியா

இடதுசாரி ஆர்வலர்களை விடுவிக்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகான் பகுதிகளில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட 5 இடதுசாரி ஆர்வலர்களை விடுதலை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது, இடதுசாரி ஆர்வலர்களுக்கு எதிரான வழக்கில் நடத்தப்பட்டுள்ள விசாரணை தொடர்பான விவரங்களை, வரும் திங்கள்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மகாராஷ்டிர காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
அதற்குப் பிறகு, எதிர் மனுதாரர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகான் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களது துணையுடன் தலித்துகள், போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெற்றி விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது.
அந்த கலவரத்தை தூண்டியதாக, இடதுசாரி ஆர்வலர்களான வரவர ராவ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், வெர்னான் கான்சால்வ்ஸ், கெளதம் நவ்லஹா ஆகிய ஐந்து பேரை மகாராஷ்டிர காவல் துறையினர் கடந்த மாதம் 28-ஆம் தேதி கைது செய்தனர். அப்போது முதல் அவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
வரவர ராவ் உள்ளிட்ட ஐவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களை கைது செய்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், பொருளாதார வல்லுநர்கள் பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே, மனித உரிமை ஆர்வலர் மஜா துருவாலா உள்ளிட்டோர் அந்த மனுவை தாக்கல் செய்தவர்களாவர். 
அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பு விசாரணை நடத்தியபோது, வழக்கு தொடர்பான ஆதாரங்கள் புனையப்பட்டவை என்பது தெரியவந்தால் அதுகுறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனக் கூறியிருந்தது. இந்நிலையில், அந்த வழக்கு குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது ஒத்திவைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT