புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சரத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் இணைந்து நிதீஷ் குமார் கடந்த ஆண்டு ஆட்சியமைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஜேடியு கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், தனி அணியாகச் செயல்பட்டார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் லோக்தந்திரிக் ஜனதா தளம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.இதனிடையே, அவரை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் சரத் யாதவ் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் நிதீஷ்குமார் அணியைச் சேர்ந்த ஜேடியு மாநிலங்களவை எம்.பி. ராம் சந்திர பிரசாத் சிங், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் சரத் யாதவ் அணி புதிய கட்சியைத் தொடங்கி விட்டது என்று தெரிவித்திருந்தது. ஆனால் இம்மனுவை ஏற்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து ராம் சந்திர பிரசாத் சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் சரத் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சரத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.