முகப்பு
இந்தியா

எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் பதிவுகளை வெளியிட்டது இந்தியா

பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் பதிவுகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:


பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் பதிவுகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எஃப்-16 விமானங்களைப் பயன்படுத்தியதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனை இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தியதற்கும் ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்-16 ரக விமானங்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தான் விளக்கம் அளித்திருந்த நிலையில், ரேடார் காட்சிகளை வெளியிட்டு இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவுடன் கடந்த பிப்ரவரி மாத வான் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்ததில், அவற்றில் ஒன்று கூட குறையவில்லை என்று தெரிய வந்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "ஃபாரின் பாலிஸி' பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இதன் மூலம், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, தனது மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வருவது குறித்து அந்தப் பத்திரிகை சந்தேகம் எழுப்பியது.

இதுகுறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வான் சண்டைக்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானிலுள்ள எஃப்-16 ரக விமானங்களைக் கணக்கெடுத்ததாக "ஃபாரின் பாலிஸி' பத்திரிகையில் வெளியான தகவல் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, அந்தத் தகவலை ஆமோதிக்கவோ, மறுக்கவோ எங்களால் இயலாது. அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் எங்களது ராணுவ தளவாட வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பது பாதுகாப்புத் துறையின் கொள்கையாகும். எனவே, அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்யப்பட்டதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்து எங்களால் கருத்து கூற முடியாது என்று கூறியிருந்த நிலையில், எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்களையும் இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத விவகாரத்தைப் பொருத்தவரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ உதவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடத்திய கொடூரத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்திருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், மறுநாள் தங்களது போர் விமானங்களை இந்திய எல்லைக்குள் அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றது.

எனினும், அந்த முயற்சியை இந்திய விமானப் படை வெற்றிகரமாக முறியடித்தது. அப்போது நடைபெற்ற வான் சண்டையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 பைசன் விமானம் பாகிஸ்தான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு, பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பாராசூட் மூலம் குதிப்பதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தெரிவித்தது.

எனினும், அதுகுறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் "ஃபாரின் பாலிஸி' பத்திரிக்கை வெளியிட்டிருந்த கட்டுரை குறித்தே அமெரிக்க பாதுகாப்புத் துறை இவ்வாறு விளக்கமளித்தது. முன்னதாக, அந்தக் கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த இந்திய விமானப் படை துணை தளபதி ஆர்.ஜி.வி. கபூர், 8 முதல் 10 கி.மீ. இடைவெளியில் இரு விமானங்கள் வீழ்த்தப்பட்டு அதிலிருந்த விமானிகள் பாராசூட் மூலம் குதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு விமானம் எஃப்-16 ரகத்தைச் சேர்ந்தது என்பது அது வெளியிட்ட மின்னணு குறியீட்டு அலைகள் மூலம் தெரிய வந்ததாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.