இந்தியா

ஊழலில் காங்கிரஸ், மம்தா இடையே போட்டி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஊழலில் ஈடுபட போட்டி நிலவி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாட்டின் பிரதமராக வேண்டுமென மம்தா பானர்ஜி கனவு காண்கிறார். பிரதமர் பதவியை ஏலத்துக்கு விட்டால், அவரும், காங்கிரஸ் கட்சியும் ஊழல் மூலம் அடைந்த பணத்தைக் கொண்டு, பிரதமர் பதவியை வாங்கிவிடுவர். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஊழலில் ஈடுபட போட்டிபோட்டு வருகின்றன. சாரதா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு, மாநில முதல்வரே ஆதரவாகச் செயல்படுவது, மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில், ஊழலும் குற்றங்களும் தவிர்க்கமுடியாதவை.
முன்பு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களைத் தனது கட்சியில் இணைத்துக்கொண்ட மம்தா, தற்போது வெளிநாட்டவரைக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். மேற்கு வங்கம் ஆட்சி செய்யப்படுவதைப் போல், இந்தியாவும் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்து வருகிறார். மேற்கு வங்கத்தில் அதிகமான வரியை மம்தா அரசு மக்களிடம் வசூலித்து வருகிறது. இதை நாடு முழுவதும் அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்னை விமர்சிப்பதும், தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தி தெரிவிப்பதும், மக்களவைத் தேர்தலில் அவரது தோல்வி பயத்தையே காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்குத் தூக்கமில்லை: மக்களவைத் தேர்தலில் பாஜக பக்கம் அலை வீசுவதால், எதிர்க்கட்சிகளால் தூங்க முடியவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிஸா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமாகத் தொடர்ந்து அலை வீசி வருகிறது. இவ்வளவு மக்களின் ஆதரவைக் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் கூட நான் காணவில்லை. நான் சவால் விடுகிறேன். மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சியே அமையப் போகிறது. கடந்த 5 ஆண்டுகளில், பாஜகவுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்போர், தக்க பலன்களை அனுபவிப்பர். மக்கள் அவர்களுக்கு உரிய முறையில் பதில் அளித்து வருகின்றனர். 
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளன. தற்போது, என்னை விமர்சனம் செய்ய புதிய வழிகளை அவர்கள் தேடி வருகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் தான் வளர்ச்சி சாத்தியப்படும். முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சியில், வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. இது, உங்களுக்கான (வாக்காளர்கள்) நேரம். நாட்டிலும், மாநிலத்திலும் வளர்ச்சி ஏற்படுவதற்காக உங்களது இரண்டு கைகளாலும் (மக்களவைத் தேர்தலுக்காக ஒன்று; சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒன்று) தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஒடிஸா மாநிலம் கேந்திரபாராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற 
பிரதமர் நரேந்திர மோடி. உடன் கேந்திரபாரா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வைஜயந்த் பாண்டா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT