இந்தியா

தலைமறைவு நிதிமோசடியாளராக அறிவிப்பது பொருளாதார மரண தண்டனைக்கு சமம்: விஜய் மல்லையா

DIN

தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிப்பது, பொருளாதார ரீதியிலான மரண தண்டனைக்கு சமமானது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்று விட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், விஜய் மல்லையாவை தலைமறைவு நிதிமோசடியாளராக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதை எதிர்த்தும், தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்தும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சித் மோரே, பாரதி தாங்க்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா தரப்பில், மூத்த வழக்குரைஞர் அமித் தேசாய் ஆஜராகி, மல்லையாவின் வாதங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
எனது (மல்லையா) கடன் தொகையும், அதற்கான வட்டித் தொகையும் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. எனது கடனை திருப்பிச் செலுத்துவதற்கு தேவையான சொத்துகள் உள்ளன. ஆனால், கடனை அடைப்பதற்கு அந்த சொத்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளிக்க மறுக்கிறது.
எனது சொத்துகள் தற்போது எனது கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை, பொருளாதார ரீதியிலான மரண தண்டனையாகும்.
நாடு முழுவதும் இருக்கும் எனது சொத்துகளை முடக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தலைமறைவு நிதிமோசடியாளர்கள் தொடர்பான சட்டம் கடுமையானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும். இந்த சட்டத்தை பயன்படுத்தி, அனைத்து சொத்துகளையும் அரசு முடக்குகிறது. அந்த சொத்துக்கள் தவறான வழியில் வாங்கப்பட்டதா? அல்லது இல்லையா? என்று கூட மத்திய அரசு ஆலோசிப்பதில்லை என்றார்.
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் டி.பி. சிங் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த சட்டம் மிகவும் கடுமையானது கிடையாது. அமலாக்கத் துறை தனது இஷ்டம் போல செயல்படுவதை இந்த சட்டம்தான் தடுக்கிறது. சொத்துகளை முடக்குவது உள்பட அனைத்து நடவடிக்கைகளும், நீதிமன்ற அனுமதிக்குப் பிறகுதான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சட்டமானது, மல்லையா போன்ற நபர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது. சாதாரண மக்களுக்காக கொண்டு வரப்படவில்லை. ரூ.100 கோடி மற்றும் அதற்கு அதிக மதிப்பிலான தொகையை மோசடி செய்துவிட்டு தப்பிச் செல்லும் நிதிமோசடியாளர்களை திருப்பி நாட்டுக்கு கொண்டு வரும் வகையிலேயே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மல்லையா தரப்பு வாதத்தை ஏற்று, சொத்துகளை முடக்கும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டனர். அதேநேரத்தில், தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்டத்தை எதிர்த்து மல்லையா தாக்கல் செய்திருக்கும் மனு குறித்து பதிலளிக்கக்கோரி, அட்டர்னி ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT