இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த பேர ஊழல் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை கசிய விடப்பட்டதாக குற்றம்சாட்டி, இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கில், மிஷெல் உள்ளிட்ட 3 இடைத்தரகர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் துபையில் இருந்த மிஷெல் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரை டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தில், மிஷெல் லஞ்சமாக சுமார் ரூ. 190 கோடி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், லஞ்சமாக ரூ.225 கோடியை மிஷெல் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை குறிப்பிட்டிருந்தது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த விவகாரத்தால் அரசுக்கு ரூ.2,666 கோடி இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, தில்லி நீதிமன்றத்தில் மிஷெல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த பேர ஊழல் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஊடகங்களிடம் கசியவிட்டு அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு, தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் டி.பி. சிங் வாதாடுகையில், "குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் பதிவு செய்து கொண்ட நிலையில், அதில் இருக்கும் கருத்துகளை ஊடகங்கள் வெளியிட்டதில் தவறில்லை; ஆதலால் மிஷெலின் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
மிஷெல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதாடுகையில், "ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல், அமலாக்கத் துறையிடம் யாருடைய பெயரையும் மிஷெல் வெளியிடவில்லை. இந்த வழக்கை தீவிரமானதாக்கவே இதுபோல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மிஷெலிடம் குற்றப்பத்திரிகையின் நகல் அளிக்கப்படுவதற்கு முன்பு, அது ஊடகங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், வழக்கு மீதான தீர்ப்பை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT