rafale verdict review petition 
இந்தியா

கூடுதல் அவகாசம் கிடையாது: மத்திய அரசுக்கு மே 6-ஆம் தேதி 'ரஃபேல் செக்'  

ரஃபேல் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக் கோரும் விவகாரத்தில், பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

IANS

புது தில்லி:  ரஃபேல் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக் கோரும் விவகாரத்தில், பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை, ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, அந்த ரகசிய ஆவணங்கள் தொடர்பான ஆங்கில நாளிதழின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செளரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகக் கசிந்த ஆவணங்களையும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் எவரும் தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, முதலில் மத்திய அரசின் ஆட்சேபங்கள் மீது முடிவு செய்தபிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வானது, மத்திய அரசின் ஆட்சேபங்களை புறந்தள்ளி, ரஃபேல் தீர்ப்பு மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது விசாரணை வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என்று தீர்ப்பளித்தது.

வழக்கு விசாரணை செவ்வாயன்று (30.04.19) நடைபெற இருந்த நிலையில் திங்களன்று மத்திய அரசு சார்பில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்து. அதில் புதிய பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் நேரம்  வேண்டும். எனவே செவ்வாயன்று நடைபெற உள்ள வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுமீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காத தலைமை நீதிபதி, விசாரணையை ஒத்தி வைப்பது பற்றி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்கும் மத்திய அரசின் வழக்கறிஞர் கடிதம் ஒன்று அனுப்பலாம் என்று மட்டும் தெரிவித்தார்.  

இந்நிலையில் ரஃபேல் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக் கோரும் விவகாரத்தில், பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

திட்டமிட்டபடி இந்த வழக்கானது செவ்வாயன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் கூறினார்.

ஆனால் அதனை மறுத்த நீதிமன்றம் வரும் சனிக்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT