இந்தியா

வலிமையான அரசு மீண்டும் அமைவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை: பிரதமர் மோடி

DIN


வலிமையற்ற அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் விருப்பம்; வலிமையான அரசு மீண்டும் அமைவதில் அக்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, பிகார் மாநிலம், முசாஃபர்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது:
மத்தியில் வலிமையான அரசு மீண்டும் அமைவதை சிறையில் இருப்பவர்கள் (ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர்) விரும்பவில்லை. அவர்கள் வலிமையற்ற அரசு அமைய வேண்டும் என்றே கருதுகின்றனர்.
கருப்புப் பண ஒழிப்பு, ஊழல் ஆகியவற்றை வேரறுக்க எனது தலைமையிலான அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டு வருகிறது. அதன் வேகம் ஒருபோதும் குறையாது. 
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டுக்கு விசாரணைக்காக நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். 
அவருடன் தொடர்புடைய மேலும் சிலரையும் நீதிக்கு முன் நிறுத்துவோம். ஐஆர்சிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் மேலும் சில வழக்குகளில் சிக்குவார்கள். பிகாரில் இதற்கு முன்பு ஆட்சி செய்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை ஆதரிக்க வேண்டாம். ஐக்கிய ஜனதா தளம்-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் கூட வேண்டும் என்றே அக்கட்சிகள் போட்டியிடுகின்றன என்றார்.
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்,  அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிஸா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஐஆர்சிடிசி ஹோட்டல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் உரையில், துல்லியத் தாக்குதல், பாலாகோட் விமானப் படை தாக்குதல் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. 
பொதுக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT