இந்தியா

விமானப் போக்குவரத்துத் துறை முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

DIN


முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் விசாரணை அதிகாரியிடம் வரும் 23-ஆம் தேதி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சிதம்பரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
 கடந்த 2006-இல், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.70,000 கோடியில் புதிதாக 111 விமானங்கள் வாங்கப்பட்டது. இவற்றில், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களும் வாங்கப்பட்டன. இந்தக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத் துறை, அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேலிடம் விசாரணை நடத்தியது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். எனவே, விமானங்கள் கொள்முதல் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறுவதை அமலாக்கத் துறை முக்கியமாகக் கருதுகிறது.
இதுதவிர, அந்தக் காலகட்டத்தில் தனியார் விமான சேவை நிறுவனங்கள் ஆதாயம் அடையும் வகையில் போக்குவரத்து வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பிரஃபுல் படேலிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு விட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT