இந்தியா

காஷ்மீருக்குள் செல்ல ராகுல் உள்ளிட்ட தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு 

தினமணி

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வுசெய்வதற்காக சனிக்கிழமை அந்த மாநிலத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தில்லியிலிருந்து சனிக்கிழமை பிற்பகலில் ஸ்ரீநகருக்கு புறப்பட்ட 11 பேர் கொண்ட அந்தக் குழுவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இருந்தனர்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆஸாத், திருச்சி சிவா, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ், மனோஜ் ஜா, மஜீத் மேமன் உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்தை பிற்பகலில் சென்றடைந்தனர். எனினும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.

காஷ்மீர் ஆளுநர் அழைப்பின் பேரிலேயே தாங்கள் வந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு தெரிவித்தபோதிலும், மாநில அரசு நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுத்தது. அத்துடன், ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து அவர்கள் மீண்டும் தில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் அரசு, "அரசியல் கட்சித் தலைவர்கள் ஜம்மு-காஷ்மீர் வர வேண்டாம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மெல்லத் திரும்பி வரும் இயல்பு நிலையும், அமைதியும், அவர்களது வரவால் பாதிக்கப்படும். காஷ்மீரின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தலைவர்கள் அங்கு வருவது சட்டத்தை மீறிய செயலாக இருக்கும்' என்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை அங்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு ஸ்ரீநகருக்குள் அனுமதிக்கப்படாமல் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு நுழைவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"உரிமை பறிப்பு': ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீநகருக்குள் நுழைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஊடகங்களிடம் காவல்துறை முறைதவறி நடந்துகொண்டது' என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முரண்பட்ட செயல்': ஜம்மு-காஷ்மீருக்கு புறப்படும் முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு ஒருபுறம், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுவதாகக் கூறுகிறது. ஆனால் மறுபுறம், அந்த மாநிலத்துக்குள் நுழைய யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுபோன்ற முரண்பட்ட செயலை நாம் கண்டதில்லை. காஷ்மீரில் இயல்புநிலை இருந்தால், அங்கு அரசியல் தலைவர்கள் ஏன் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார்.

"அமைதியைக் குலைப்பது நோக்கமல்ல': தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேமன் கூறுகையில், "காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பது எங்கள் நோக்கமல்ல. அரசுக்கு எதிராக அல்லாமல், ஆதரவாகவே அங்கு செல்கிறோம். அங்குள்ள சூழலை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கவே காஷ்மீர் சென்றோம்' என்றார்.

கெலாட் கண்டனம்: ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT