இந்தியா

ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் பறக்கிறது தேசியக்கொடி

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமைச் செயலகத்தில் இந்திய தேசியக் கொடியுடன் இணைந்து பறந்து கொண்டிருந்த அந்த மாநிலத்துக்கான தனிக்கொடி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவின்படி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு சிறப்புச் சலுகைகள் அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தனிக்கொடி வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிறத்தில் இருந்த அந்தக் கொடியில் மூன்று வெள்ளைக் கோடுகளும், வெள்ளை நிறக் கலப்பையும் இடம்பெற்றிருந்தன.
 இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய வந்த 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி நீக்கியது. அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான தீர்மானம் மற்றும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 5ஆம் தேதியில் இருந்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
 அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இது தொடர்பான சட்டம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது.
 எனவே, ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் இந்திய தேசியக் கொடியுடன் இணைந்து பறந்து கொண்டிருந்த காஷ்மீர் கொடி அன்றைய தினம்தான் நீக்கப்படும் என்று கருதப்பட்டது. அதற்கு மாறாக, தலைமைச் செயலகத்தில் பறந்து கொண்டிருந்த ஜம்மு-காஷ்மீர் கொடி ஞாயிற்றுக்கிழமை காலையில் அகற்றப்பட்டதாகவும், தேசியக் கொடி மட்டுமே அங்கு ஏற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மாநிலத்தில் உள்ள மற்ற அரசு அலுவலகக் கட்டடங்களிலும் காஷ்மீர் கொடி அகற்றப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
 ஜம்மு-காஷ்மீருக்கான தனிக்கொடியை அந்த மாநிலத்துக்கான அரசியல் நிர்ணய சபை கடந்த 1952ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி ஏற்றுக் கொண்டது. அந்தக் கொடியில் உள்ள மூன்று கோடுகளும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளைக் குறித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT