முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் அரசியல் குழப்பத்தில் பாஜக அரசு!

கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட பாஜக அரசும் தற்போது குழப்பத்தில் மூழ்கியுள்ளது.

Updated On : 27 ஆகஸ்ட், 2019 at 5:16 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:25 PM


கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட பாஜக அரசும் தற்போது குழப்பத்தில் மூழ்கியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனைப்போட்டி நடந்ததில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 
பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கும்பொருட்டு, மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதைக் கவனத்தில் கொண்டு,  37 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த மஜதவை ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளித்தது.

இதனால்  முதல்வராக மஜதவின் குமாரசாமி,  துணை முதல்வராக காங்கிரஸின் ஜி.பரமேஸ்வர் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.  ஆனால், மஜத, காங்கிரஸைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி எழுப்பினர். இதையடுத்து,  சட்டப் பேரவையில் ஜூலை 23-இல் நடைபெற்ற வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.  இந்த அரசியல் குழப்பத்தில் தோன்றியதே எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு. 

Advertisement

கடந்த 14 மாதங்களில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக 6 முறை முயற்சி மேற்கொண்டது. கடந்த ஜூலை மாதத்தில் நடத்திய அரசியல் கலகத்தில்தான்,  பாஜக நினைத்தப்படி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஜூலை 26-இல் ஆட்சிப்பொறுப்பேற்ற எடியூரப்பா, ஜூலை 29-இல் கர்நாடக சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார். 

வெள்ளப் பணிகளை தனி நபராக ஆய்வு செய்த எடியூரப்பா: கர்நாடகத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். 108 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான வெள்ளம் என்று முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தபோதும், வெள்ள நிவாரணப் பணிகளை கவனிக்க அவரிடம் அமைச்சரவை இருக்கவில்லை. ஒற்றை ஆளாக வெள்ள நிவாரணப் பணிகளைகண்காணித்துவந்ததோடு, வெள்ளப் பாதிப்புகளையும் விமானத்தில் பறந்து ஆய்வுசெய்தார். அமைச்சரவை அமைக்க விரும்பினாலும், அதற்கு பாஜகவின் மேலிடமான அக்கட்சித்தலைவர் அமித்ஷாவின் ஆதரவு கிடைக்கவில்லை. பலமுறை புதுதில்லி பயணம் மேற்கொண்டபோதும் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் எடியூரப்பா வேதனையோடு திரும்பினார். 

அமைச்சரவையில் துறைகளிலும் ஒதுக்கீடு இல்லை- 16 இடங்களும் காலி: நீண்டமுயற்சிக்குப் பின்னர்,  அமித்ஷாவின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து ஆகஸ்ட் 20-இல் 17 அமைச்சர்களை தனது அமைச்சரவையில் எடியூரப்பா சேர்த்துக்கொண்டார். முதல்வர் உள்பட 34 பேர் அமைச்சர்களாக பதவிவகிக்கக்கூடிய அமைச்சரவையில் இன்னும் 16 இடங்கள் காலியாக உள்ளன. 
துறைகள் ஒதுக்கீட்டுக்கும் அமித்ஷாவின் அனுமதி தேவைப்படுகிறது. இதற்காக புதுதில்லிக்கு பல முறை  எடியூரப்பா பயணித்தும்  அனுமதி கிடைக்கவில்லை. 
அதிருப்தியில் பாஜக எம்எல்ஏக்கள்: அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள உமேஷ் கத்தி, ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி, ராஜுகெளடா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் பலர் வெளிப்படையாக கட்சிக்கு எதிராகவே பேசி வருகின்றனர். சட்டப் பேரவைத் தேர்தலில்தோல்வியை தழுவிய லட்சுமண்சவதிக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது பாஜக எம்எல்ஏக்களிடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் லிம்பாவளி, உமேஷ்கத்தி, ராஜுகெளடா போன்ற மூத்தத்தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகொடுக்காமல், தோற்றவரை அமைச்சராக்கியது சரியல்ல என்ற கருத்து பாஜகவில் ஒலித்து வருகிறது.

அமைச்சர் பதவி கோரும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்:  இதனிடையே, பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் புதுதில்லியில் முகாமிட்டு அமித்ஷாவை சந்திக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர். 
ஆட்சியைக் கவிழ்த்தால் அமைச்சராக்குகிறோம் என்ற வாக்குறுதி என்னவானது? என்றும் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக அமைந்தால், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உறவினர்களை வேட்பாளராக்க முன்வருமா  என்றும் அமித்ஷாவிடம் வாக்குறுதியை பெற ரமேஷ்ஜார்கிஹோளி, எச்.விஸ்வநாத், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், கோபாலையா போன்ற தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் காத்திருக்கின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை சந்திக்க அமித்ஷா விரும்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதால், ஏற்கெனவே அதிருப்தி அடைந்து மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக திரும்பிய எம்எல்ஏக்கள், தற்போது பாஜக மீது அதிருப்தி அடைந்துள்ளனர். 

3 துணை முதல்வர்கள் நியமனமா? இதனிடையே, எடியூரப்பாவுக்கு ஆட்சி நிர்வாகத்தில் முழுமையான சுதந்திரத்தை வழங்காமல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக 3 துணைமுதல்வர்களை நியமிக்க பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுமுதல்வர் எடியூரப்பாவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 2008-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியை உருவாக்கிய தன்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுவருவது முதல்வர் எடியூரப்பாவை கலங்கவைத்துள்ளது. 
பிற்படுத்தப்பட்டோரில் குருபா வகுப்பைச் சேர்ந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த சி.என்.அஸ்வத்நாராயணா, தாழ்த்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த கோவிந்த்கார்ஜோளை துணைமுதல்வராக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, எடியூரப்பா அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் துணைமுதல்வர் ஆர்.அசோக், துணைமுதல்வர் கனவில் இருக்கும் ஸ்ரீராமுலு ஆகியோரையும் பதற்றம் அடைய வைத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ள நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் பாஜக அரசு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்து, கர்நாடகத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆனால், கர்நாடகத்தில் புதிய அரசியல் தலைமையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு புதிய 
முயற்சிகளை பாஜக செய்துவருகிறது. இம்முயற்சிகள் பாஜகவுக்கு சாதகமாக அமையுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க முடியும் என்றே அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.