'உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்' - அகிலேஷ் ஆவேசம்!
உன்னாவ் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உன்னாவ் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஓராண்டுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணை, ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள், பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
லக்னௌ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பாலியல் குற்றம் புரிந்த ஒருவரை விடுவித்ததனால்தான் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதால், இதற்குப் பொறுப்பேற்று உத்தப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார்.
மேலும், ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கான அதிகாரத்தை யோகி அரசு இழந்து விட்டது என்று கூறிய அவர், நீதித்துறைஇந்த விவகாரத்தில் தலையிட்டு குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கான செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.