இந்தியா

சட்டப்பிரிவு 370 ரத்து: அரசியல் சாசன அமர்வில் நாளை விசாரணை தொடக்கம்!

DIN


உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை நாளை (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து தனி நபர்கள், ஆர்வலர்கள், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தரிகாமி என பல்வேறு தரப்பினர் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, கடந்த நவம்பர் 14-ஆம் தேதி இந்த மனுக்கள் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட பிறகே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி என்வி ரமணா தலைமையில் நீதிபதிகள் எஸ்கே கௌல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளை தொடங்குகிறது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் ஆகியோரை இந்த விவகாரம் தொடர்பாக தயாராக வருமாறு அரசியல் சாசன அமர்வு இன்று கேட்டுக்கொண்டது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணை எளிமையாக இருக்க அனைத்து ஆவணங்களையும் பொதுவான ஒரு ஆவணமாக ஒருங்கிணைக்கும்படியும் மனுதாரர்களைக் கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவிக்கையில், அனைத்து ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, விசாரணையின்போது கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அது பின்னர் தாக்கல் செய்யப்படும் என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 100 நாள்களைக் கடந்தும், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT