முகப்பு
இந்தியா

ஒரே கல்லில் 2 பறவைகளைக் கொல்லப் பார்த்தீர்களே? உன்னாவ் வழக்கில் நீதிபதி சொன்ன கருத்து

ஒரே கல்லில் 2 பறவைகளைக் கொல்லப்பார்த்தீர்களே என்று உன்னாவ் வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி, குல்தீப் செங்கருக்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞருக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
பகிர்:


புது தில்லி: ஒரே கல்லில் 2 பறவைகளைக் கொல்லப்பார்த்தீர்களே என்று உன்னாவ் வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி, குல்தீப் செங்கருக்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞருக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கா் குற்றவாளி என்று தில்லி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

செங்கருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த புகாா்கள் உண்மையானவை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனை மீதான வாதங்கள் புதன்கிழமை நடைபெறவுள்ளன.

இந்த வழக்கில் குல்தீப் செங்கருக்கு அதிகபட்சமாக, ஆயுள்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தில்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தா்மேஷ் சா்மா திங்கள்கிழமை அளித்த தீா்ப்பின் விவரம்:

சிறாா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைந்து நீதி வழங்குவதற்காகவே போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் சிபிஐ தனது விசாரணையை கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே முடித்திருந்தாலும், இந்த ஆண்டு அக்டோபா் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தியது வியப்பளிக்கிறது. 

போக்ஸோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிஐயைச் சோ்ந்த பெண் அதிகாரிதான் விசாரணை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஆண் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். பல நேரங்களில் பாதிக்கப்பட்டவரை அவரது இருப்பிடத்துக்கே சென்று விசாரிக்காமல், அவரை சிபிஐ அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்ததும் ஏற்புடையதல்ல. அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் முக்கியப் பகுதியை கசியவிட்டதும் அதிருப்தியளிக்கிறது.

அந்தப் பெண் தனக்கு நோ்ந்த கொடுமையை விவரித்து முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதிய பிறகு, அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பாய்ந்துள்ளன. (அந்தப் பெண்ணின் தந்தை ஆயுத வழக்கில் கைதாகி, காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்தாா்). அவற்றில், செங்கருக்குத் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.

தீர்ப்பில், செங்கர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மிக நுட்பமான வழியை கையாண்டார், பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை தவறாகக் காட்ட முயற்சித்ததன் மூலம், இரண்டு பறவைகளை (வழக்குகளை) ஒரே கல்லில் சாய்க்கப் பார்த்தார் என்று குறிப்பிட்டுச் சொன்னார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →