அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ள பாஜக: காங்கிரஸ் கடும் விமர்சனம்
பாரதிய ஜனதா கட்சியானது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
புது தில்லி: பாரதிய ஜனதா கட்சியானது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியானது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தடுப்புக் காவல் சட்ட ப் பிரிவான 144-ஐ பயன்படுத்தி அநேக காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யபட்டுள்ளார்கள். அஜய் மகேன் மற்றும் அவரது குடும்பத்தினர், சந்தீப் தீக்ஷித், அவரது மனைவி மற்றும் சகோதரி மற்றும் கட்சியின் சிறுபான்மையினர்பிரிவுத் தலைவர் நதீம் ஜாவேத் ஆகியோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களான டி.ராஜா மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உ.பியில் 3000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இணைய சேவையை முடக்குவது என்பது அதிகரித்துள்ளது.
மக்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். பொது அமைதிக்காகவே 144- ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டுமே ஒழிய, தடுப்புக் காவல் கைதுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.