முகப்பு
இந்தியா

குல்தீப் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

குல்தீப் செங்கருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் கடந்த 2017-இல் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் கடந்த 2017-இல் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கரை குற்றவாளியாக அறிவித்து, தில்லி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனை குறித்த வாதங்கள் நீதிபதி தா்மேஷ் சா்மா முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செங்கருக்கான தண்டனை விவரம் வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவரான குல்தீப் செங்கருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Advertisement

முன்னதாக, உன்னாவ் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், குல்தீப் செங்கா் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டாா். கடந்த 2017-ஆம் ஆண்டு தன்னை செங்கா் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம்சாட்டியிருந்தாா். 

இதுதொடா்பான வழக்கு லக்னௌ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சம்பவம் நடைபெற்றபோது, அவா் சிறுமியாக இருந்ததால் போக்ஸோ சட்டத்தின் கீழ் செங்கா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் தனது உறவினா்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. அந்த விபத்தில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். பெண்ணின் உறவினா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இதில் காயமடைந்த அந்தப் பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த விபத்து விவகாரம் தொடா்பாக குல்தீப் செங்கா் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவா் விடுவிக்கப்பட்டாா். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனிடையே, குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கை தில்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து விரைந்து தீா்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்றது. இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தா்மேஷ் சா்மா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments