ஜார்க்கண்ட் விநோதம்: தந்தை, தாயைத் தொடர்ந்து எம்எல்ஏ ஆன மகள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பர்காகோ தொகுதியில், தந்தை மற்றும் தாயைத் தொடர்ந்து அவர்களது மகள் எம்எல்ஏவாகி சாதனை படைத்துள்ளார்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பர்காகோ தொகுதியில், தந்தை மற்றும் தாயைத் தொடர்ந்து அவர்களது மகள் எம்எல்ஏவாகி சாதனை படைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பர்காகோ தொகுதியில் வெற்றி பெற்று ஒரே தொகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் தாயைத் தொடர்ந்து மகள் அம்பா பிரசாத் (31) தற்போது எம்எல்ஏவாகியுள்ளார்.
2009ம் ஆண்டு தேர்தலில் அம்பா பிரசாத்தின் தந்தை யோகேந்திர பிரசாத் சாவோ இதேத் தொகுதியில் போட்டியிட்டு வென்று ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பின்னர், 2014ம் ஆண்டு இவருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், 2014ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில், அவருக்குப் பதிலாக அவரது மனைவி நிர்மல் தேவி, பர்காவோ தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில், விவசாயிகள் பேரணியை முன்னின்று நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. இருவருமே பல மாதங்கள் சிறையில் கழித்து வந்த நிலையில், ஜார்க்கண்டில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் இவர்களது மகள் அம்பா பிரசாத்துக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இவருக்காக ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார். இறுதியில் அவர் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எனவே, ஒரே தொகுதியில் தந்தை, தாயைத் தொடர்ந்து மகள் தற்போது எம்எல்ஏவாகியுள்ளார்.