முன்னாள் முதல்வரின் மீதான புகாரை வாபஸ் பெற்ற வருங்கால முதல்வர்
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுவர்தாஸ் மீதான தனது புகாரை, விரைவில் மாநில முதல்வராக உள்ள ஹேமந்த் சோரன் வாபஸ் பெற்றுள்ளார்.
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுவர்தாஸ் மீதான தனது புகாரை, விரைவில் மாநில முதல்வராக உள்ள ஹேமந்த் சோரன் வாபஸ் பெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணி சார்பில் ஹேமந்த் சோரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி 1 இடத்திலும் வென்றன. இதன் மூலம் அந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. பாஜகவுக்கு 25 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய முதல்வரான ரகுவர்தாஸ், ஜேஎம்எம் தலைவரான ஹேமந்த் சோரன் மற்றும் அவரது குடும்பத்தாரை விமர்சித்து பேசியதாக, கடந்த 19-ஆம் தேதியன்று ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள மிஹிஜம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹேமந்த் சோரன் புகார் அளித்தார் . அந்த புகாரின் அடிப்படையில் புதன்கிழமையன்று முதல் அகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ரகுவர்தாஸ் மீதான தனது புகாரை, விரைவில் மாநில முதல்வராக உள்ள ஹேமந்த் சோரன் வாபஸ் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக ராஞ்சியில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாங்கள் அந்த புகாரைத் தொடர விரும்பவில்லை; எனவே அதனை வாபஸ் பெற்றுள்ளோம். எந்த ஒரு தீங்கான எண்ணத்தின் பிடியிலும் செயல்பட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் நேர்மறையான மனநிலையில் செயல்பட விரும்புகிறோம். தேர்தல் பிரசாரத்தின் போது என்ன நடந்ததோ அதுமுடிந்து விட்டது. மாநிலத்தை வளர்ச்சிப் பாதை நோக்கித் செலுத்த வேண்டிய தருணம் இது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இதில் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.